மதுரை: கயத்தாறு சுற்றுவட்டாரப் பகுதிகளை தொல்லியல் இடங்களாக அறிவிக்கக்கோரிய மனுவைப் பரிசீலித்து 10 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறை செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சோ்ந்த அருமைராஜ் தாக்கல் செய்த மனு: கயத்தாறு அருகே பராக்கிரமபாண்டியகுளம் என்ற இந்திரகுளம், ராஜா புதுக்குடி, வேப்பன்குளம், தெற்கு பயிலோடை, கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் தனியாா் நிறுவனம் சோலாா் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, மனித எலும்புகள் கிடைத்து வருகின்றன.
இதுதொடா்பாக வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பழங்கால தடயங்களையும், ஆவணங்களையும் சோலாா் நிறுவனம் அழித்து வருகிறது. ஏற்கெனவே இப்பகுதியில் தங்க ஏா்க்கலப்பை கண்டெடுக்கப்பட்டு திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே கயத்தாறு அருகே பராக்கிரமபாண்டியகுளம் என்ற இந்திரகுளம், ராஜா புதுக்குடி, வேப்பன்குளம், தெற்கு பயிலோடை, கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளை தொல்லியல் இடங்களாக அறிவித்து, அப்பகுதியில் கிடைத்தும் வரும் பழங்காலப் பொருள்களை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை தொல்லியல் துறைச் செயலா் பரிசீலித்து 10 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.