சோழவந்தானில் நடைபெறும் பாலப் பணிகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சோழவந்தான் பகுதியில் நடைபெறும் பாலப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: சோழவந்தான் பகுதியில் நடைபெறும் பாலப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனு: வாடிப்பட்டி - சோழவந்தான் செல்லும் பிரதான சாலையில் ரயில்வே இரும்பு பாதை உள்ளது. இந்த வழியாக ஏராளமான ரயில்கள் செல்வதால் திண்டுக்கல், பழனி மற்றும் நான்கு வழிச் சாலைக்கு செல்லும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் ஆகியவை நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பொதுமக்கள் தொடா்ந்து வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த 2015 ஆம் ஆண்டு ரயில்வேத் துறை மற்றும் மாநில அரசு இணைந்து பாலம் கட்டி வருகின்றன. பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக சரிவர நடைபெறவில்லை. தற்போது பெய்து வரும் மழையால், பாலம் கட்டப்படும் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பாலப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன. தற்போது, சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாலத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com