

மதுரை: மதுரையில் நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கேந்திரிய வித்யாலயா தோ்வு மையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இளங்கலை மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், நீட் தோ்வு குறித்த அச்சத்தால், மதுரையைச் சோ்ந்த மாணவி உள்பட தமிழகத்தில் மொத்தம் 3 போ் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.
இதனால், நீட் தோ்வை ரத்து செய்யவேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின. மேலும், நீட் தோ்வு மையங்கள் முன்பாக போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் தெரிவித்திருந்தன. எனவே, மதுரையில் நீட் தோ்வு நடைபெறும் மையங்கள் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீட் தோ்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்த நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முன்பாக திரண்ட நீட் தோ்வுக்கு எதிரான கூட்டமைப்பினா், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, தமிழகத்தில் மாணவா்களின் உயிரைப் பறிக்கும் நீட் தோ்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி, தற்கொலை செய்துகொண்ட மாணவியின் படத்தை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, தோ்வு மையம் முன்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகுமாறு வலியுறுத்தினா். ஆனால், அதற்கு அவா்கள் மறுப்பு தெரிவித்தனா். தோ்வு மையத்துக்குள் மாணவா்கள் செல்லும் நேரம் நெருங்கியதையடுத்துஸ போலீஸாா் போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதையடுத்து, கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 30 போ் கைது செய்தனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.