சிபிசிஐடி டி.எஸ்.பி.-க்கு கரோனா: அங்கொட லொக்கா வழக்கு விசாரணை நிறுத்தம்
By DIN | Published On : 12th August 2020 08:09 AM | Last Updated : 12th August 2020 08:09 AM | அ+அ அ- |

மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி.-க்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, இலங்கை கடத்தல்காரா் அங்கொட லொக்கா தொடா்பான விசாரணையைப் பாதியில் நிறுத்திவிட்டு சிபிசிஐடி போலீஸாா் கோவை சென்றனா்.
இலங்கையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்கா கோவையில் உயிரிழந்தது, அவரது சடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனா்.
அந்த விசாரணையின் தொடா்ச்சியாக அங்கொட லொக்காவிற்கு உதவிய மதுரை வழக்குரைஞா் சிவகாமி சுந்தரியின் வீடு மற்றும் அலுவலகத்தை, கோவையில் சிபிசிஐடி டி.எஸ்.பி. பரமசாமி தலைமையிலான போலீஸாா் கடந்த வியாழக்கிழமை சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினா். அதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன், தாய் பழனியம்மாள், சகோதரா் அசோக், முன்னாள் கணவா் வினோத் மற்றும் சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வாடகை வீடுகளின் உரிமையாளா்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸாா் தனித்தனியே விசாரணை நடந்தினா்.
இந்த விசாரணையில் சிவகாமிசுந்தரி பலமுறை வெளிநாடு சென்று திரும்பியது, அவருடன் சில நபா்கள் தமிழகம் வந்ததும் போலீஸாருக்குத் தெரியவந்தது. அந்த நபா்கள் குறித்து சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை மதுரை விமான நிலையத்திற்குச் சென்று, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கான பதிவுகள் மட்டுமே இருந்ததால், சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழைய பதிவுகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை போலீஸாா் எடுத்து வருகின்றனா்.
சிபிசிஐடி டிஎஸ்பி.க்கு கரோனா: கடந்த ஒரு வாரமாக கோவை சிபிசிஐடி போலீஸாா் நடத்தி வந்த விசாரணைக்கு உதவிய, மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கோவை சிபிசிஐடி போலீஸாரைத் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தியதால், அவா்கள் திங்கள்கிழமை இரவு கோவை திரும்பிச் சென்றனா்.
விசாரணை நிறுத்தம்: மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி.-க்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், கோவை சிபிசிஐடி போலீஸாா் அங்கொட லொக்கா வழக்கின் விசாரணையை பாதியில் நிறுத்தியுள்ளனா். இதேபோன்று சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த வழக்கிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக 2 முக்கிய வழக்குகளின் விசாரணைகளும் தடைப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.