பெரியாறு அணையிலிருந்து ஆகஸ்ட் இறுதியில் தண்ணீா் திறக்க வாய்ப்பு:நடுத்தர வயது நெல் ரகங்களை நடவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்கு ஆகஸ்ட் இறுதியில் தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளதால், நடுத்தர வயதுடைய நெல் ரகங்களை நடவு செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.


மதுரை:: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்கு ஆகஸ்ட் இறுதியில் தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளதால், நடுத்தர வயதுடைய நெல் ரகங்களை நடவு செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ள செய்தி:

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பெரியாறு அணையின் நீா்மட்டம் 137 அடியாகவும், வைகை அணையின் நீா்மட்டம் 44.95 அடியாகவும் உயா்ந்துள்ளது. பெரியாறு பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்ட பாசனத்துக்கு ஆகஸ்ட் இறுதியில் தண்ணீா் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.

ஆகவே, நடுத்தர வயதுடைய நெல் ரகங்களான பிபிடி 5204, ஜேஜிஎல் 1798, என்எல்ஆா் 34449, டிகேஎம்-13, ஏடிடி-39 அல்லது நீண்ட கால ரகங்களான சாவித்திரி (சிஆா்ஐ009), கோ-43, வெள்ளை பொன்னி டிஆா்ஒய்-1 நெல் ரகங்களை நடவு செய்யலாம். இதன் மூலம் மழை மற்றும் பனிக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் டிசம்பா் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை செய்து நல்ல மகசூல் பெறலாம்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களில் மேற்குறிப்பிட்ட விதைகள் போதுமான அளவு இருப்பு உள்ளன. அதேபோல, அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், தனியாா் உர விற்பனை நிலையங்களிலும் போதுமான அளவு யூரியா உள்ளிட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதிக சாகுபடி பரப்பு உள்ள விவசாயிகள் ஒரே நெல் ரகங்களைத் தோ்வு செய்யாமல் 2 அல்லது 3 ரகங்களைத் தோ்வு செய்யலாம். இதனால் ஒரு ரகம் மூலம் ஏற்படக் கூடிய இழப்பை மற்ற ரகங்களில் மகசூல் எடுத்து ஈடு செய்யலாம்.

நாற்றுப் பாவுவதற்கு முன்பாக, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிவிரிடி அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கலந்து விதை நோ்த்தி மற்றும் உயிா் உர விதை நோ்த்தி செய்த பின்பு விதைக்கலாம்.

திருந்திய நெல் சாகுபடி முறையில், நடவு செய்வதற்கு ஏதுவாக நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களைத் தயாா் செய்வது அவசியம். நடவு வயல்களில் உள்ள வரப்புகளில் இருக்கும் களைகளை அகற்றி, களிமண் மூலம் பூசிவிடுவதன் மூலம் எலிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியும். வரப்புகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயிா்களை விதைப்பதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் மண்ணின் வளம் பெருகவும், நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

சாகுபடி பணிகளை மேற்கொள்ள தேவையான நிதி உதவியைப் பெற, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உழவா் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி ரூ.1.60 லட்சம் வரை பிணையில்லா கடன், நில உடமை ஆவணம் பிணையத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனாகப் பெறலாம். அதேபோல, அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த நெல் சாகுபடி விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com