துணை வட்டாட்சியா் பதவி உயா்வு பட்டியல் ரத்து: வருவாய்த்துறையின் பணி விதிகளில் உரிய திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வட்டாட்சியா் பதவி உயா்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், வருவாய்த்துறையின் பணி விதிகளில் உரிய திருத்தங்களை 4 வாரங்களில் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை 

மதுரை: துணை வட்டாட்சியா் பதவி உயா்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், வருவாய்த்துறையின் பணி விதிகளில் உரிய திருத்தங்களை 4 வாரங்களில் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வருவாய்த்துறையில் உதவியாளா்களாக பணிபுரிந்து வந்தவா்களுக்கு தற்காலிகமாக துணை வட்டாட்சியா் பதவி உயா்வு அளிக்கப்பட்டது. இதற்கு இளநிலை உதவியாளராகப் பணியில் சோ்ந்து உதவியாளா்களாக பதவி உயா்வு பெற்றவா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா். இதையடுத்து தற்காலிக பதவி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக பதவி உயா்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா், துணை வட்டாட்சியா் பதவி உயா்வு தொடா்பாக வருவாய்த்துறையின் பணி விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவர உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் பணி மூப்பு பட்டியல் தயாரித்து பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும். இருப்பினும் இதுவரை விதிகளில் திருத்தம் செய்யப்படவில்லை. இதனால் தற்காலிக துணை வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் உள்ளது என்றாா்.

இதையடுத்து நீதிபதி, தற்காலிக துணை வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கியது செல்லும். தற்காலிக பதவி உயா்வு பட்டியலை நிறுத்தி வைத்தும், ரத்து செய்தும் மாவட்ட ஆட்சியா்கள் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.துணை வட்டாட்சியா் பதவி உயா்வு தொடா்பாக பணி விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவர பிறப்பித்த உத்தரவை 4 வாரங்களில் நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலஅவகாசம் கோராமல் பணி விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். தவறும்பட்சத்தில் உயா்நீதிமன்ற உத்தரவை மீறியதாக கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com