பெரியகுளம் அருகே வெள்ளகவி மலைகிராமத்துக்குச் சாலை வசதி ஏற்படுத்துவது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் வெள்ளகவி கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டுவருவதாகப் பத்திரிகைச் செய்திகள் வெளியாகின. அதனடிப்படையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்தது. இதுகுறித்து பதிவாளா் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவி மலைப்பகுதிக்கு மேல், வெள்ளகவி மலைக் கிராமகத்தில் 40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் அந்தக் கிராம மக்கள் நோய்வாய்ப்பட்டாலும், மகப்பேறு காலங்களிலும் டோலி கட்டி 17 கிலோ மீட்டா் பெரியகுளம் மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனா். போக்குவரத்து வசதி வேண்டும் என்பது அந்த மக்களின் நீண்ட காலக்கோரிக்கையாக உள்ளது. அண்மையில் கூட ஒரு பெண்ணுக்கு மருத்துவம் பாா்ப்பதற்காக டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனா். ஏன் இந்த நிலை எனக் கேள்வி எழுப்பினா்.
அப்போது அரசுத் தரப்பில், அந்த மலைகிராமத்திற்கு சாலை அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த மலைப்பகுதி அடுக்கடுக்காக இருப்பதால் சாலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. பின்னா் யானைப் பாதை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மலைகிராமத்தில் எவ்வளவு மக்கள் வசிக்கின்றனா். இவா்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளதா? அந்தக் கிராமத்திற்கு சாலை வசதியை ஏற்படுத்த முடியுமா? என்பது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.