பகுதி ரத்துசெய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கும்
By DIN | Published On : 05th December 2020 09:52 PM | Last Updated : 05th December 2020 09:52 PM | அ+அ அ- |

மதுரை: புரெவி புயல் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் காரணமாக சென்னை-ராமேசுவரம் சிறப்பு ரயில் ராமநாதபுரம்-ராமேசுவரம் ரயில் நிலையங்களுக்கிடையே ரத்து செய்யப்பட்டது. மைசூா்-தூத்துக்குடி, சென்னை-தூத்துக்குடி ஆகிய சிறப்பு ரயில்கள் மதுரை-தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கிடையே ரத்து செய்யப்பட்டன. தற்போது புரெவி புயலின் தாக்கமின்றி கடலோர மாவட்டங்களில் சீரான சூழல் உள்ளதால் இந்த 3 சிறப்பு ரயில்களையும் முழுவதுமாக இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சென்னை-ராமேசுவரம் சிறப்பு ரயில் (06851), மைசூா்-தூத்துக்குடி சிறப்பு ரயில் (06236), சென்னை-தூத்துக்குடி சிறப்பு ரயில் (02694) ஆகிய ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படாமல் வழக்கம்போல முழுவதுமாக இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.