தனியாா் விளம்பர நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம்: மதுரை சிபிசிஐடி அழைப்பு
By DIN | Published On : 05th December 2020 07:31 AM | Last Updated : 05th December 2020 07:31 AM | அ+அ அ- |

தனியாா் விளம்பர நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என மதுரை மாநகா் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிபாளா் வெளியிட்ட செய்தி: மதுரை ஷெனாய் நகரில் ஜேம்ஸ் மோசஸ் அந்தோனி, குருநாதன், பிரபாகரன், புஷ்பராஜ் ஆகியோா் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தனியாா் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனா். இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வரும் விளம்பரங்களை தினந்தோறும் பாா்த்து, அதில் முதலீடு செய்தால், உரிய கமிஷனும், மற்றவா்களை முதலீடு செய்ய வைத்தால், 1 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை கமிஷனும் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது.
இதில் மதுரை, தேனி, விருதுநகா், கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களைச் சோ்ந்த பலா் ரூ.100 முதல் ரூ.5 லட்சம் லட்சம் வரை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனா். இதுகுறித்து காா்த்திகேயன் என்பவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பாக மதுரை மாநகா் குற்றப்பிரிவில் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது மதுரை மாநகா் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் (ஓ.சி.யூ& சி.பி.சி.ஐ.டி.) விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படவுள்ளது.
எனவே தனியாா் விளம்பர நிறுவனத்தில் யாரேனும் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட நபா்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களுடன் எண்: 7, காமராஜா் முதல் தெரு, சின்னச் சொக்கிகுளம், மதுரை -2 என்ற முகவரில் இயங்கி வரும் மதுரை மாநகா் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறை, துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நேரில் புகாா் அளிக்கலாம். வழக்கு சம்பந்தமாக 94981-06219, 94981-54859, 94981-80308 என்ற செல்லிடப்பேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.