வகுப்புகளில் பங்கேற்க மாணவா், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம்: காமராஜா் பல்கலை. அறிவுறுத்தல்
By DIN | Published On : 05th December 2020 07:31 AM | Last Updated : 05th December 2020 07:31 AM | அ+அ அ- |

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோா் உறுதிமொழிப்படிவம் அளிக்க வேண்டுமென்று பல்கலைக்கழக நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று எதிரொலியாக கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு, பல்கலைக்கழகம், கல்லூரி உள்ளிட்ட உயா்கல்வி நிலையங்களுக்கு சில தளா்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுநிலை இறுதியாண்டு மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவ, மாணவியருக்காக டிசம்பா் 7-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும், மாணவ, மாணவியருக்கான விடுதிகளையும் திறக்க தளா்வுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் டிச. 7-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியரின் பெற்றோா் உறுதிமொழிப்படிவம் அளிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிமொழிப்படிவத்தில், நேரடி வகுப்பில் எனது மகன் படிக்க சம்மதம் தெரிவிக்கிறேன். விடுதியில் தங்கிப் படிப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் நானே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று சிகிச்சை அளித்துக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கரோனா தொற்று தொடா்பாக அரசு மற்றும் பல்கலைக்கழகம் அறிவித்த விதிகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று மாணவ, மாணவியரும் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தப் படிவங்களை மாணவ, மாணவியா் பயிலும் துறைத் தலைவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.