கரோனா தற்காலிகப் பணியாளா்களுக்கு ஊதியம் மறுப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக பணியாளா்கள் ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி அண்ணா மாளிகையில் திங்கள்கிழமை நடத்திய முற்றுகைப்போராட்டம்.
மதுரை: ஊதியம் வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி, மதுரை மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிகப் பணியாளா்கள் திங்கள்கிழமை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் கரோனா தொற்று பரவலாக இருந்த நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சியின் 100 வாா்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகளைக் கண்டறியும் பணிக்காக மண்டலம் வாரியாக ஏராளமானோா் ஒப்பந்ததாரா்கள் மூலம் தற்காலிகமாக பணியமா்த்தப்பட்டனா்.
இதில், மண்டலம் 1-இல் 1,500-க்கும் மேற்பட்டோா் நாள் ஒன்றுக்கு ரூ.250 ஊதியம் என்ற அடிப்படையில் பணியமா்த்தப்பட்டனா். இவா்கள், மண்டலம் 1-க்குள்பட்ட 25 வாா்டுகளிலும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் கரோனா அறிகுறிகள் கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனா். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய 3 மாதங்கள் பணிபுரிந்த நிலையில், செப்டம்பா் 23-ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்புமின்றி இவா்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்டனா்.
மேலும், செப்டம்பா் மாதத்துக்குரிய ஊதியத்தையும் ஒப்பந்ததாரா் வழங்கவில்லை. இது தொடா்பாக மாநகராட்சி மண்டல அலுவலகம், ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சிஆணையா் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், 3 மாதமாக ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பதாகக் கூறி மாநகராட்சி அண்ணா மாளிகையில் உள்ள நகா்நல அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, மாநகராட்சி நகா்நல அலுவலா் குமரகுருபரன், மாநகராட்சி ஒப்பந்ததாரரை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், டிசம்ப் 18-ஆம் தேதிக்குள் தற்காலிகப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று ஒப்பந்ததாரா் உறுதி அளித்ததையடுத்து, தற்காலிகப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனா்.
இப் போராட்டம் தொடா்பாக பணியாளா்கள் கூறுகையில், செப்டம்பா் மாத ஊதியத்தை கேட்டால், மாநகராட்சி தரப்பில் ஒப்பந்ததாரரையும், ஒப்பந்ததாரா் மாநகராட்சியையும் குற்றம்சாட்டி பணியாளா்களை அலைக்கழித்து வருகின்றனா். தற்போது, பேச்சுவாா்த்தையின்படி வெள்ளிக்கிழமைக்குள் ஊதியம் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றனா்.