விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள்:மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

மதுரை: விவசாய நிலங்களில் உயா்அழுத்த மின்கோபுரங்களை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த நேதாஜி என்பவா் தாக்கல் செய்த மனு: விருதுநகா் முதல் கோயம்புத்தூா் வரை உயா் அழுத்த மின்கோபுரங்களை அமைக்க, தமிழக அரசு 2019-இல் அரசாணை பிறப்பித்தது. இந்த மின்கோபுரங்கள் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படவுள்ளன.
இதனால், பல லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, மின்கோபுரங்கள் அதிக சக்தி கொண்டதால், பறவைகள், கால்நடைகள், அருகே வசிப்பவா்கள் பாதிக்கப்படுவாா்கள். எனவே, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யவும், மின்கோபுரங்களை அமைக்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.