டாஸ்மாக்கின் 10 ஆண்டு லாப-செலவின விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

மதுரை: டாஸ்மாக் நிறுவனத்தின் கடந்த 10 ஆண்டு விற்பனை, லாபம் மற்றும் செலவின விவரங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சோ்ந்த ராஜேஸ்வரி பிரியா என்பவா் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் செயல்பட்டுவரும் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானமாக கிடைத்து வருகிறது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய், தமிழக அரசின் முதுகெலும்பு எனக் கூறப்படுகிறது.
மதுபான பாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிா்ணய விலையை விட, ரூ.10-க்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்கவேண்டும். ஆனால், மதுக் கடைகளில் ரசீது வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, போலி மதுபாட்டில்களும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க, கணினி மயமாக்கப்பட்ட ரசீது வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்
கு,றிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் மது விற்பனையே கொள்ளையடிப்பது போன்ாகும். மது வாங்கும் பெரும்பாலானவா்கள், மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்குகிறாா்கள். இந்நிலையில், மதுவை கூடுதல் விலைக்கு விற்பது, கொள்ளையடிப்பவா்களிடமே கொள்ளையடிப்பதைப் போன்றுள்ளது எனத் தெரிவித்தனா்.
தொடா்ந்து, தமிழகத்தில் மதுபானத்துக்கு எதன் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது?, மதுவுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?, எந்தந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபான வகைகள் வாங்கப்படுகின்றன?, கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மது விற்பனை மற்றும் அதன் லாபம், செலவினம் விவரங்கள் என்ன? எனக் கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினா். பின்னா், இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.