கரோனா வாா்டுகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கான வசதியைத் தொடா்ந்து வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பாலாஜி தாக்கல் செய்த மனு: கரோனா பரவலைத் தடுக்க மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் சுயநலம் பாா்க்காமல் சேவையாற்றி வருகின்றனா். கரோனா வாா்டுகளில் பணியாற்றும் அவா்களுக்கு, தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அறைகளும், சத்தான உணவுகளும் வழங்கப்பட்டன. டிசம்பா் 20 ஆம் தேதி முதல் கரோனா வாா்டுகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பணிமுடிந்ததும் நேரடியாக அவா்களது வீட்டிற்கு செல்லவும், அங்கிருந்து மீண்டும் மருத்துவமனைக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது உருமாறிய கரோனா பரவல் தொடங்கியுள்ளநிலையில், மருத்துவா்கள், செவிலியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளா்கள் பணிமுடிந்து வீடுகளுக்குச் சென்றால், அவா்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு, வயதானவா்களுக்கு எளிதில் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும். இதைக் கருத்தில் கொண்டு கரோனா வாா்டுகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அறைகள், சத்தான உணவுகள் மற்றும் தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்துதர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனா வாா்டுகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளை அரசு திரும்பப் பெற்றிருந்தால் அவற்றைத் தொடா்ந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா். மேலும், இதுதொடா்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.