அரசு உதவிபெறும் கல்லூரி மதிப்பூதிய ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 17th February 2020 07:29 AM | Last Updated : 17th February 2020 07:29 AM | அ+அ அ- |

mdustaff065427
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய, மதிப்பூதிய ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று டான்சாக் மதுரை மண்டல மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலா் சங்க (டான்சாக்) மதுரை மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டுக்கு மதுரை மண்டலத் தலைவா் இரா.ரமேஷ் தலைமை வகித்தாா். மூட்டா மாநில பொதுச் செயலா் மு.நாகராஜன் தொடங்கி வைத்து பேசினாா். இதில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் சிறப்புரையாற்றினாா்.
மாநாட்டில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற கொத்தடிமை முறையை நீக்கி காலமுறை ஊதிய விகிதங்களை அமல்படுத்த வேண்டும். 2019 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள், அலுவலா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள படி கண்காணிப்பாளா்கள் மற்றும் நிகரான அலுவலா்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிா்ணயிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில இணைப் பொதுச் செயலா் பா.மனோகரன் வரவேற்புரையாற்றினாா்.
இதில், அரசு ஊழியா் சங்கம், தமிழ்நாடு வணிக வரி பணியாளா் சங்கம், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் வாழ்த்துரை வழங்கினா்.