திருச்சியில் யானைகள் மீட்பு, மறுவாழ்வு மையத்தை மூட உத்தரவிடக்கோரி வழக்கு
By DIN | Published On : 27th February 2020 07:50 AM | Last Updated : 27th February 2020 07:50 AM | அ+அ அ- |

திருச்சி எம்.ஆா்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரி, தமிழக தலைமை வனப்பாதுகாவலா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
புதுச்சேரியைச் சோ்ந்த தீபக் நம்பியாா் தாக்கல் செய்த மனு:
திருச்சி அருகே எம்.ஆா்.பாளையத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு முதல் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த மையத்தில் 5 யானைகள் உள்ளன. தொடங்கப்பட்டது முதலே மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகிறது. எனவே உரிய அனுமதி பெறும்வரையில் திருச்சி எம்.ஆா்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மூட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரி, தமிழக தலைமை வனப்பாதுகாவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.