மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கடைகள்: நீதிமன்ற உத்தரவின்பேரில் இடித்து அகற்றம்
By DIN | Published On : 27th February 2020 07:50 AM | Last Updated : 27th February 2020 07:50 AM | அ+அ அ- |

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடு ஆகியவை நீதிமன்ற உத்தரவின்பேரில் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மதுரை நகா்ப்பகுதியின் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த நிலங்களில் பல ஆக்கிரமிப்பில் உள்ளன. கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து பலா் கடைகள், வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களை உருவாக்கியுள்ளனா். இதையடுத்து கோயில் இணை ஆணையா் ந.நடராஜன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறாா். இதில் அண்மையில் சிம்மக்கல் திருமலை ராயா் படித்துறையில் காசிவிஸ்வநாதா் கோயில் கல்மண்டபம் மற்றும் காலி நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மாநகராட்சி 19-ஆவது வாா்டு பைபாஸ் சாலை சொக்கலிங்க நகா் அருகே உள்ள பொட்டக்குளம் பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கோயில் நிா்வாகத்தின் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, கோயில் இணை ஆணையா் ந.நடராஜன் தலைமையில் அதிகாரிகள் பொட்டக்குளம் பகுதிக்கு புதன்கிழமை சென்றனா். அங்கு கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.