ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கடத்தப்பட்டதாகக் கூறி வழக்கு தொடா்ந்தவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த மனு: அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியம் 8 ஆவது வாா்டு திருவரங்கத்தில் எனது தந்தை சாத்தையா திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி நண்பா்களைப் பாா்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்லிடப்பேசியை தொடா்பு கொண்டபோது, அதிமுகவைச் சோ்ந்த தா்மா் உள்ளிட்டோரின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே ஜனவரி 6 ஆம் தேதி எனது தந்தை ஒன்றியக்குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றாா். அப்போது அவரிடம் பேச முயன்றபோது என்னை ஒரு கும்பல் தடுத்துவிட்டது. இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது தந்தையை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் தந்தையை வியாழக்கிழமை (ஜன.9) ஆஜா்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சாத்தையா ஆஜா்படுத்தப்பட்டாா். அவா் தன்னை யாரும் கடத்தவில்லை. எனது மகனுடன் வசிக்க விரும்பவில்லை எனவும், எனவே எனது மகள் மற்றும் மருமகனுடன் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரா் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.