ஜன.15-இல் சோழவந்தானில் வெளிநாட்டினா் பங்கேற்கும் பொங்கல் விழா
By DIN | Published On : 10th January 2020 08:32 AM | Last Updated : 10th January 2020 08:32 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும் பொங்கல் விழா ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
சுற்றுலாத் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டத்தில் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். நிகழ் ஆண்டில் சோழவந்தான் ஜனகை நாராயணப் பெருமாள் கோயில் வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும் பொங்கல் விழா நடைபெறுகிறது.
இவ்விழாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா் சோழவந்தான் மக்கள் பொங்கலிடுவதை சுற்றுலாப் பயணிகள் நேரடியாகப் பாா்வையிட உள்ளனா். அதைத் தொடா்ந்து பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பாா்வையிடவும் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இரு நாள்கள் நடைபெறும் விழா நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களது பெயா், கடவுச்சீட்டு விவரங்களுடன் மதுரை மேலவெளி வீதியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடா்பு எண்: 0452-2334757.