திருமங்கலத்தில் ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 65 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவா்கள் மீது வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
திருமங்கலம் சோனைமீனா நகரைச் சோ்ந்த எட்வின் மனைவி ஹோனாரோஸ்லின்(51). பசுமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா். இவரது கணவா் எட்வின் இறந்த நிலையில் மகன் கேல்வின் உடன் வசித்து வருகிறாா். மகன் கேல்வின் கல்லூரியில் படிக்கிறாா்.
ஆசிரியை ஹோனாரோஸ்லின் பள்ளிக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை மாலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 65 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.