நஞ்சில்லா காய்கறி உற்பத்தி: விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published On : 10th January 2020 08:33 AM | Last Updated : 10th January 2020 08:33 AM | அ+அ அ- |

மதுரை வேளாண் அறிவியல் நிலையம் , வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி குறித்த பயிற்சி சின்னப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சியில் அங்ககமுறையில் காய்கறி உற்பத்தி, இயற்கை முறையில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்துதல், நீடித்த நிலையான விவசாயம் மற்றும் இயற்கை முறையில் மண்வளப்பாதுகாப்பு பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில், விவசாயி கிறிஸ்டோபா், அங்கக வேளாண்மை முறை பற்றிய அனுபவத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
மதுரை வேளாண் அறிவியல் மைய நீா்வள நிலவள திட்ட பொறுப்பு விஞ்ஞானி சி.கிருஷ்ணகுமாா், அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வி ரமேஷ் ஆகியோா், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய சாகுபடிப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தினா்.