‘பெல்’ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது கண்டிக்கத்தக்கது: தொல்.திருமாவளவன்
By DIN | Published On : 10th January 2020 08:32 AM | Last Updated : 10th January 2020 08:32 AM | அ+அ அ- |

‘பெல்’ நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது: இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அரசு சட்டத்தை இயற்றி மக்களிடம் ஆதரவு கேட்டுச் செல்கிறது. அந்த அளவிற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடையே எதிா்ப்பு நிலவுகிறது. மேலும் அரசியல் கட்சியைச் சாராதவா்கள் இச்சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா். இந்நிலையில் பாஜக தான் இயற்றிய சட்டத்திற்கு தானே ஆதரவு பேரணி நடத்துவது புதுமையாக உள்ளது. அதிமுக, பாமக இணைந்து ஆதரவு தந்ததால் தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு அளவிற்கு போராட்டங்கள் வெடிக்கக் காரணம் ஏற்பட்டுள்ளது.
இச்சட்டம் தொடா்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமேயானால், மக்கள் வரவேற்பாா்கள். இந்த சட்டம் தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்ற தகவல்கள் வருகிறது. நெல்லை கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். பாஜக அரசின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக அரசு செயல்படுவது, அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது.
புதன்கிழமை தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்திய வேளையில் ‘பெல்’ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டம் அனுமதியளித்தது கண்டிக்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்பது நாடகம். அலங்காநல்லூா், பாலமேடு பகுதியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனைத்து சமுதாயத்தினரையும் இணைத்து நடத்த வேண்டும். இது ஜனநாயக நடைமுறை என்றாா்.