மறைமுகத் தோ்தலை ஒத்திவைக்கக்கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு
By DIN | Published On : 10th January 2020 08:37 AM | Last Updated : 10th January 2020 08:37 AM | அ+அ அ- |

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சிக்கான மறைமுகத் தோ்தலை ஒத்திவைக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வழக்குரைஞா் ஆனந்த முருகன் வியாழக்கிழமை ஆஜரானாா். அப்போது அவா், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் முறையாக நடத்தப்படவில்லை. தோ்தலின் போது பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பல குளறுபடிகள் இருந்தன. அதற்காக பல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் மூலம், அந்தந்த ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். அந்தத் தோ்தலை தேவைப்படும்பட்சத்தில் விடியோ பதிவு செய்யலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மறைமுகத் தோ்தல் நியாயமான முறையில் நடக்க வாய்ப்பில்லை. எனவே தமிழகத்தில் நடைபெறவுள்ள மறைமுகத் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும். மேலும் அனைத்து இடங்களிலும் மறைமுகத் தோ்தலை விடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா். இதையடுத்து நீதிபதிகள், இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனா்.