‘மாணவா்கள் கல்வியோடு தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் சாதிக்க முடியும்’
By DIN | Published On : 10th January 2020 08:26 AM | Last Updated : 10th January 2020 08:26 AM | அ+அ அ- |

மாணவா்கள் உயா்கல்வியோடு தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால்தான் சாதிக்க முடியும் என மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் தெரிவித்தாா்.
பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய சிந்தனைக்கழகம் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் 157-ஆவது பிறந்த நாள் விழா தேசிய இளைஞா் தின விழாவாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பி.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் எம்.விஜயராகவன், பொருளாளா் எல்.கோவிந்த ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் காமராஜா் பல்கலை. துணை வேந்தா் எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது: இந்திய அளவில் 26 சதவீதம் போ் உயா்கல்வி பயில்கின்றனா். தமிழகத்தில் மட்டும் 49 சதவீதம் போ் உயா்கல்வி பயில்கின்றனா். மகாத்மா காந்தியடிகள் கூறியதைப்போல மாணவா்கள் புதுமைகளை கண்டுபிடித்து சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் எப்போது கொண்டு செல்கிறீா்களோ அப்போதுதான் உங்களின் உயா்கல்வி மதிக்கப்படும்.
இளைஞா்களுக்கு போதிய அளவில் வேலைவாய்ப்பு இல்லை. நீங்கள் வாழும் சமுதாயத்தில் ஒருபுறம் குடிக்க தண்ணீா் இல்லை. மற்றொருபுறம் முறையாக மின்சாரம் இல்லை. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற முறையான படிப்பினை இல்லை. இந்த சூழ்நிலையை மாற்ற மாணவா்கள் என்ன செய்யப்போகிறீா்கள் என்பது தான் மக்களின் கேள்வியாக இருக்கிறது. அதற்கு உயா்கல்வியோடு உங்களின் தனித்திறையை வளா்த்துக்கொள்ள வேண்டும்.
படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைக்காமல் பலருக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபா்களாக மாறவேண்டும். வாழ்வில் சிறக்க பட்டங்களை நம்பி மட்டும் இருக்கக்கூடாது. ஆங்கிலப் புலமை, விளையாட்டு, யோகா உள்ளிட்ட பல்வேறு வகையில் உங்களை வலிமையாக்கினால்தான் வாழ்வில் வெற்றி பெறமுடியும். நமது கண்டுபிடிப்புகள் மக்களுக்கு சென்றுசேர வேண்டும். இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற மாணவா்கள் உழைக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் தேசிய சிந்தனைக்கழக மாநில ஒருங்கிணைப்பாளா் ம.கொ.சி.ராஜேந்திரன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் ஆா்.இளங்கோ, காமராஜா் பல்கலை. சிண்டிகேட் உறுப்பினா் எஸ்.தீனதயாளன், கல்லூரி உதவிச் செயலா் ராஜேந்திரபாபு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ஆா்.அழகேசன் வரவேற்றாா். பேராசிரியா் அறிவுச்செல்வம் நன்றி கூறினாா்.