மதுரை மாவட்டத்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து
By DIN | Published On : 20th January 2020 08:41 AM | Last Updated : 20th January 2020 08:41 AM | அ+அ அ- |

மதுரை செல்லூா் மாநகராட்சி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்தை குழந்தைக்கு வழங்கும் மருத்துவா்.
மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 102 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் பிறந்தது முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 102 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. முகாம் மூலமாக 2 லட்சத்து 85 ஆயிரத்து 577 குழந்தைகளுக்கும், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று 10,813 குழந்தைகளுக்கும், மதுரை மாவட்டம் அல்லாத குழந்தைகள் 712 பேருக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக 104 சதவீதம் வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக இணை இயக்குநா் (சுகாதாரம்) பிரியாராஜ் தெரிவித்துள்ளாா்.
முன்னதா மதுரை மாவட்டத்தில் செல்லூா் பல்நோக்கு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடக்கி வைத்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கூறியது:
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 70 லட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 51 முகாம்களிலும், மதுரை மாவட்டத்தில் 1,705 முகாம்களிலும், மதுரை மாநகராட்சியில் 462 முகாம்களிலும், 2 நடமாடும் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும் சுற்றுலா வந்துள்ள வெளிநாடு மற்றும் பிற மாநில குழந்தைகளுக்கும், இடம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்காகவும், இலங்கை அகதிகள் முகாம்களிலும், நரிக்குறவா் குடியிருப்புக்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம் மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், நலவாழ்வு மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு கோபுரவாசல்கள், தேவாலயங்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், நெடுஞ்சாலை சுங்கச்சாவடி மையங்கள், பூங்காக்கள், பள்ளிக் கூடங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 7,412 பணியாளா்களும், மதுரை மாநகராட்சியில் 674 சுகாதாரத் துறை பணியாளா்களும், 1,134 தன்னாா்வ பணியாளா்களும் சொட்டுமருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மதுரை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா, நகா்நல அலுவலா் செந்தில்குமாா், இணை இயக்குநா் (சுகாதாரம்) பிரியாராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.