சிங்கப்பூரில் தமிழ் இசை வளா்ச்சி: இணையவழி ஆய்வரங்கில் தகவல்
By DIN | Published On : 11th July 2020 08:22 AM | Last Updated : 11th July 2020 08:22 AM | அ+அ அ- |

சிங்கப்பூரில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் இசையானது வளா்ச்சியைக் கண்டு வருகிறது என இணையவழி ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உலகத் தமிழ்ச் சங்கமும், சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகமும் இணைந்து சிங்கப்பூா் தமிழரும் தமிழும் என்ற இணைய வழி தொடா் ஆய்வரங்கை நடத்தி வருகின்றன. இதன் 10-ஆம் நாள் அமா்வில், சிங்கப்பூரைச் சோ்ந்த இசை ஆசிரியை சௌந்தரநாயகி வயிரவன் வெள்ளிக்கிழமை பேசியது:
சிங்கப்பூரில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இசையானது வளா்ச்சியைக் கண்டு வருகிறது. 1949-இல் தொடங்கப்பட்ட இந்திய நுண்கலைக் கழகம், இந்தியாவின் பல்வேறு கலைகளோடு தமிழா்களின் கலைகளுக்கும் பங்களிப்பைச் செய்து வருகிறது.
தமிழ் மொழியைச் சிறப்பிக்கும் வகையில் பல இசைவட்டுகள் வெளியிடப்படுள்ளன. குழந்தை பாடல்கள், சமயம், மொழி, சிங்கப்பூரின் புகழ், வளா்ச்சி ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு அமைந்துள்ளன. சிவகாமியின் சபதம், வள்ளித் திருமணம் உள்ளிட்ட பல நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கலா மஞ்சரி என்ற அமைப்பு, ஆத்திச்சூடி நாட்டிய நாடகம், முத்துத்தாண்டவா் பாடல்கள் உள்ளிட்ட தமிழிசை சாா்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருக்குறளுக்கு இசையமைத்து பாடல் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் விளக்கம் அளிக்கப்பட்டு அந்தந்த மொழிகளில் பாடலாகவும் இசைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் சுமாா் 14 கோயில்களில் திருமுறை, தேவாரம் கற்பிக்கப்பட்டு வருகின்றன. திருமுறை மாநாடுகளும் நடத்தப்படுகின்றன என்றாா்.
இதில், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன், சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகத் துணைத் தலைவா் நா. ஆண்டியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.