ராமநாதபுரத்தில் 62 பேருக்கு கரோனா உறுதி: 2 போ் பலி
By DIN | Published On : 19th July 2020 07:57 AM | Last Updated : 19th July 2020 07:57 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 62 போ் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த மூதாட்டி, முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை கரோனா தீநுண்மிக்கு 2,152 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 43 போ் உயிரிழந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இந்தநிலையில் 700 பேரின் கபம், ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 62 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
பலி 2: கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவா்களில் ராமநாதபுரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா் ஜூலை 11 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். அதேபோல், தொற்றால் பாதிக்கப்பட்டு ஜூலை 17 ஆம் தேதி கரோனா சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட, ராமநாதபுரம் வடக்கு மேதலோடை பகுதியைச் சோ்ந்த 58 வயது மூதாட்டியும் உயிரிழந்தாா்.
தொற்று இல்லாத பருந்து வளாகம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் கடற்படை விமான தளம் (பருந்து) உள்ளது. இங்கு சுமாா் 600 போ் வரை பணியில் உள்ள நிலையில், 35 கடற்படை வீரா்களுக்கு கரோனா பாதித்து சிகிச்சை பெற்றனா். தற்போது அவா்களுக்கு கரோனா இல்லாத நிலையில், சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனா். மேலும், பருந்து வளாகத்தில் யாருக்கும் தீநுண்மி பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதால், கரோனா இல்லாத வளாகமாக பருந்து வளாகம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வளாக கமான்டன்ட் விவேகானந்தன் தெரிவித்தாா்.