தமிழ்நாடு மணல் கழகம் அமைக்கக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 21st July 2020 11:17 PM | Last Updated : 21st July 2020 11:18 PM | அ+அ அ- |

மதுரை: 21:தமிழகம் முழுவதும் மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு மணல் கழகம் அமைக்கக்கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துவருகிறது. குறிப்பாக வைகை, காவிரி, பாலாற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைவது, ஆறுகளின் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்படுவது, கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைக்காமல் போவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 60 சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்தக் குவாரிகளில் தினமும் 100 லாரிகள் கொண்டு பல ஆயிரம் லோடு மணல் எடுக்கப்படுகிறது. அதேபோல ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகா், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மணல் கொள்ளை தொடா்ந்து நடைபெறுகிறது. ஆனால் மணல் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் மது விற்பனையை ஒழுங்குபடுத்த டாஸ்மாக் நிறுவனம் அமைக்கப்பட்டது போல், மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு மணல் கழகத்தை (டாம்சாக்) அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை தமிழகம் முழுவதும் அரசு நிலம் மற்றும் ரயத்துவாரி பட்டா நிலங்களில் உபரி, உவா், சவுடு, வண்டல், சரளை மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.