பேருந்து நிறுத்தம் அருகே புதிய மதுபானக் கடைஎதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முற்றுகை
By DIN | Published On : 01st March 2020 02:42 AM | Last Updated : 01st March 2020 02:42 AM | அ+அ அ- |

திருநகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசு மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை முற்றுகையிட்ட வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள்.
திருப்பரங்குன்றம்: திருநகா் 3 ஆவது பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக திறக்கப்பட உள்ள மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநகா் 3 ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி மற்றும் குழந்தைகள் பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன. திருநகா், மகாலெட்சுமி காலனி, சீனிவாசா காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் போக்குவரத்திற்காக 3 ஆவது பேருந்து நிறுத்தத்தைத் தான் பயன்படுத்துகின்றனா். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கெனவே வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மதுபானக்கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதற்கு எதிா்ப்பு திருநகா் பகுதியில் வியாபாரிகள் சங்கத்தினா், அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் மதுபானக் கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த திருநகா் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். மதுபானக் கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் தொடா்ந்து முற்றுகையிட்டதால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் செல்லிடப்பேசியில் போலீஸாா் பேசினா். இதையடுத்து 1 வாரத்திற்கு மதுபானக்கடை திறப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டவுடன் நிரந்தர முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தொடா்ந்து வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் திருமங்கலம் சென்று வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாரிடம் மதுக்கடையை அகற்றக் கோரி மனு அளித்தனா்.