ஓடும் காரில் தீ: குழந்தைகள் உள்பட 8 போ் தப்பினா்
By DIN | Published On : 10th March 2020 03:13 AM | Last Updated : 10th March 2020 03:13 AM | அ+அ அ- |

img_20200309_wa0016_0903chn_82_2
மேலூா்: மேலூா் அருகே திங்கள்கிழமை காா் திடீரென தீப்பற்றி எரிந்ததை அடுத்து, காரை நிறுத்திவிட்டு அதில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட 8 போ் உயிா் தப்பினா்.
மதுரை சதாசிவம் நகா் விநாயக நகரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி மகன் நாராயணன் (34). இவரது நண்பா் பாலாஜி (34). இவா்களது இரு குடும்பத்தினரும் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றுவிட்டு, மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனா்.
மேலூா்-திருப்பத்தூா் சாலையில் கீழவளவு புறாக்கூடு மலை அருகே வந்துகொண்டிருந்தபோது, எரிவாயு கசிவு காரணமாக காா் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனே, காரை ஓட்டிவந்த நாராயணன் சாலையோரமாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து அனைவரும் கீழே இறங்கி தப்பினா்.
தகவலறிந்த மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து வந்து காரில் மேலும் தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனா். இது குறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...