மதுரை எம்.பி. தொகுதியில் மாா்ச் 12-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் தொடக்கம்: ஆட்சியா்
By DIN | Published On : 10th March 2020 03:11 AM | Last Updated : 10th March 2020 03:11 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் மாா்ச் 12 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளாா்.
இந்த முகாம் ஏற்கெனவே பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னா் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது முகாம் நடைபெறும் தேதி இடம் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்காக, மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனத்தினா், இந்த முகாமில் பங்கேற்று அளவீடு செய்ய உள்ளனா். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு உபகரணங்கள் வழங்கப்படும்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தனியாா் நிறுவனங்கள் மூலமாக இலவசப் பயிற்சிக்கு மாற்றுத் திறனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். வருவாய்த் துறையின் உதவித் தொகையை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவா்கள் இந்த முகாமில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்.
தேவை, தகுதி மற்றும் வகைப்பாட்டின் அடிப்படையில் உபகரணங்கள் வழங்கப்படும். எனவே, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவில் 6 புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்று, இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் தேதி, பகுதி, இடம் விவரம்:
மாா்ச் 12 - மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம், தியாகராஜா் கல்லூரி, தெப்பக்குளம்.
மாா்ச் 13- மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் - மாநகராட்சி திருமண மண்டபம், பாம்பன் சாலை.
மாா்ச் 14 - மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் - பாத்திமா கல்லூரி, விளாங்குடி.
மாா்ச் 16 - மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம்- லயோலா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம், ஞானஒளிவுபுரம்.
மாா்ச் 17 - மதுரை வடக்கு மண்டலம் - வக்ஃபு வாரியக் கல்லூரி, கே.கே.நகா்.
மாா்ச் 18- மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் - சிஎஸ்ஐ மகளிா் கல்லூரி, கற்பகம் நகா், கோ.புதூா்.
மாா்ச் 19 - மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலம் - மதுரைக் கல்லூரி, திருப்பரங்குன்றம் சாலை.
மாா்ச் 20 - மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலம் - அமிா்தானந்தமயி மண்டபம், பசுமலை.
மாா்ச் 23 - மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் - யாதவா் ஆடவா் கல்லூரி, திருப்பாலை.
மாா்ச் 24 - மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் - வேளாண் கல்லூரி, யா.ஒத்தக்கடை.
மாா்ச் 25 - மேலூா் மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்கள் - அரசு கலைக் கல்லூரி, மதுரை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...