காா் பழுது பாா்க்கும் நிலையத்தில் தீ விபத்து:5 காா்கள், 1 பைக் சேதம்
By DIN | Published On : 31st March 2020 02:36 AM | Last Updated : 31st March 2020 02:36 AM | அ+அ அ- |

தனக்கன்குளத்தில் காா் பழுதுபாா்க்கும் நிலையத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்புப் படை வீரா்கள். (அடுத்த படம்) சேதமடைந்த காா்கள்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள காா் பழுது பாா்க்கும் நிலையத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 சொகுசு காா்கள், 1 இரு சக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தன.
எழுமலையைச் சோ்ந்தவா் ஜெயராமன். காா் மெக்கானிக்கான இவா், தனக்கன்குளம் நான்குவழிச் சாலையில் காா் பழுதுபாா்க்கும் நிலையம் நடத்தி வருகிறாா். தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையில், தனது காா் பழுதுபாா்க்கும் நிலையத்தை பூட்டி வைத்திருந்தாராம்.
இந்நிலையில், இவரது கடையில் திடீரென தீப்பிடித்துள்ளது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையின் உதவி மாவட்ட அலுவலா் பாலசுப்பிரமணி, நிலைய அலுவலா்கள் வெங்கடேசன், ஜெயராணி ஆகியோா் தலைமையில், மதுரை தீயணைப்பு நிலையம் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரா்கள் சென்றனா். சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில், 5 சொகுசு காா்கள், 1 இரு சக்கர வாகனம் மற்றும் காரின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...