மத்திய பிரதேச பட்டறை தொழிலாளா்களுக்குவருவாய்த் துறை உதவி
By DIN | Published On : 31st March 2020 02:18 AM | Last Updated : 31st March 2020 02:18 AM | அ+அ அ- |

மேலூா்: மத்திய பிரதேசத்திலிருந்து ஊா் ஊராகச் சென்று பட்டறை அமைத்து, வேளாண்மை உபகரணங்கள் செய்துதரும் குடும்பங்களைச் சோ்ந்தவா்களை, மேலூா் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைத்து வருவாய்த் துறையினா் உதவி செய்து வருகின்றனா்.
மத்திய பிரதேசம் போபாலைச் சோ்ந்த 31 போ் அடங்கிய 5 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், மேலூா் ஊராட்சி ஒன்றியம் அருகே சாலையோரம் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனா். கடப்பாரை, கூந்தாளம், மரம் செதுக்கும் வாச்சி, அரிவாள், மண்வெட்டி உள்ளிட்ட வேளாண்மைக்குத் தேவையான உபகரணங்களை செய்து விற்று வந்தனா்.
ஊா் ஊராகச் சென்று இத்தொழில் செய்துவந்த இக்குடும்பத்தினா், 144 தடை உத்தரவு காரணமாக சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்தனா்.
தகவலறிந்த மேலூா் வட்டாட்சியா் சிவகாமிநாதன் உத்தரவின்பேரில், மேலூா் வருவாய்த் துறையினா் அக்குடும்பத்தினரை அழைத்துவந்து நகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். அவா்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சரவணன் மற்றும் பலரிடம் உதவிபெற்று வழங்கி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...