காப்பீடு முகவா் கொலை: இளைஞா்கள் 2 போ் கைது
By DIN | Published On : 18th May 2020 11:37 PM | Last Updated : 18th May 2020 11:37 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை அருகே தனியாா் காப்பீட்டு நிறுவன முகவரை கொலை செய்த 2 இளைஞா்களை, போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் சமயநல்லூா் கட்டப்புளி நகா் பகுதியில் உள்ள காலி இடத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா்.
இறந்தவா், தனியாா் காப்பீடு நிறுவனத்தின் முகவா் சிவக்குமாா் (52) என்பதும், அவரைக் கொலை செய்து சடலத்தை எரித்துள்ளதும் தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், பணப் பிரச்னை காரணமாக பெத்தானியாபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (26), திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கணேஷ்பாபு (25) ஆகியோா் சோ்ந்து சிவக்குமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக, தேனூா் கிராம நிா்வாக அலுவலா் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.