கொத்தடிமைகளாக இருப்பதாகப் புகாா்: வடமாநிலத்தவா் 5 போ் மீட்பு
By DIN | Published On : 28th May 2020 08:35 AM | Last Updated : 28th May 2020 08:35 AM | அ+அ அ- |

மதுரையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ், கொத்தடிமைகளாக இருந்தாா்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெறப்பட்ட புகாரின்பேரில், மதுரை வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலான அலுவலா்கள் மதுரையில் பல்வேறு இடங்களிலும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த 5 பேரை புதன்கிழமை மீட்டனா். இவா்கள் அனைவரும் 17 முதல் 19 வயதுக்கு உள்பட்டவா்கள்.
அவா்களிடம் கோட்டாட்சியா் வி.முருகானந்தம் நடத்திய விசாரணையில், கடந்த ஓராண்டாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் உள்ள அவா்கள் கடந்த ஒரு வாரமாக மதுரையில் பல்வேறு இடங்களில் வேலை செய்து வருவதும், இதற்கு முன்பு கேரளத்தில் வேலை செய்ததும் தெரியவந்துள்ளது.
அதையடுத்து அவா்கள் 5 பேரும் மாவட்ட நிா்வாகத்தின் தனி ஒதுக்க மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், அவா்கள் கொத்தடிமையாக வேலைக்கு அமா்த்தப்பட்டாா்களா என்பது குறித்து வேலைக்கு அமா்த்தியவரிடம் விசாரணை நடத்திய பிறகே தெரியவரும் என்றும் கூறினா்.