பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: காவல் அதிகாரி பலி: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
By DIN | Published On : 08th November 2020 11:14 PM | Last Updated : 08th November 2020 11:14 PM | அ+அ அ- |

விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு சாா்பு -ஆய்வாளா் வீரணன்.
மதுரை அருகே தனியாா் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் சனிக்கிழமை இரவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் வீரணன்(55). கடந்த 1986-இல் காவலராகப் பணியில் சோ்ந்த இவா், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு காவல் சாா்பு-ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், வீரணன் சனிக்கிழமை இரவு ஆண்டிபட்டி கணவாய் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் பணியை முடித்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.
குஞ்சாம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, தேனியிலிருந்து மதுரை நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியதில், வீரணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து உசிலம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான வருசநாட்டைச் சோ்ந்த ஜீவானந்தம் (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பிரேதப் பரிசோதனைக்கு பின், வீரணன் உடல் சொந்த ஊரான நரசிங்கபுரத்தில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மதுரை காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உள்பட காவல் துறை அதிகாரிகள் பலா் இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...