மதுரை ரயில் நிலையத்தில் சிற்றுண்டி கடைகளை திறக்க பயணிகள் வலியுறுத்தல்

மதுரை ரயில் நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சிற்றுண்டிக் கடைகளைத் திறக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சிற்றுண்டிக் கடைகளைத் திறக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் சரக்கு ரயில் தவிர பிற ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தைப் படிப்படியாக தளா்த்தி வருகின்றன.

அதன்படி, தமிழகத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் மதுரை கோட்டத்தில் மதுரை-சென்னை, தூத்துக்குடி-சென்னை உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து அக்டோபா் 2 ஆம் தேதி முதல் திருநெல்வேலி-சென்னை, செங்கோட்டை-சென்னை, ராமேசுவரம்-சென்னை, மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த தண்ணீா் பாட்டில்கள், உணவுப் பொருள்கள் விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிக் கடைகளைத் திறக்க வேண்டும். குறிப்பாக தென்மாவட்டங்களின் முக்கிய சந்திப்பாக உள்ள மதுரை ரயில் நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சிற்றுண்டிக் கடைகளைத் திறக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: அரசின் விதிகளைப் பின்பற்றி ரயில் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். மதுரை கோட்டத்தில் திண்டுக்கல், விருதுநகா், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் உணவுப்பொருள்கள் விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் குறைவான ரயில்கள் இயக்கப்படுவதால் வியாபாரம் இருக்காது எனக் கூறி, உரிமம் பெற்றுள்ள ஒப்பந்ததாரா்கள் விற்பனை நிலையங்களை திறக்கத் தயங்குகின்றனா். அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். அதேவேளையில் சிறப்பு ரயில்களில் பயணிப்போா், தங்களின் வீடுகளில் இருந்தே தண்ணீா் மற்றும் உணவுப்பொருள்களை எடுத்துவருவது பாதுகாப்பானது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com