மதுரையில் மக்கள் நீதிமன்றம்: 218 வழக்குகளில் ரூ.2.50 கோடிக்கு தீா்வு
By DIN | Published On : 03rd October 2020 09:56 PM | Last Updated : 03rd October 2020 09:56 PM | அ+அ அ- |

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்னுக்கு இழப்பீட்டுக்கான காசோலையை வழங்குகிறாா் முதன்மை நீதிபதி நசிமாபாணு.
மதுரை: மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 218 வழக்குகளில் ரூ.2 கோடியே 50 லட்சத்து 2 ஆயிரத்து 700-க்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள விபத்து இழப்பீடு தொடா்பான வழக்குகள், விவாகரத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்தம் 380 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அவற்றில் 218 வழக்குகளில் ரூ. 2 கோடியே 50 லட்சத்து 2 ஆயிரத்து 700 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில், விபத்தில் சிக்கி 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வரும் விருதுநகரைச் சோ்ந்த ராமா் என்பவரது மனைவி சுதாவுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீமாபானு வழங்கினாா். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் வி.தீபா, மக்கள் நீதிமன்றத்தின் தலைவா் கிருபாகரன்மதுரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.