இளைஞரிடம் எல்.ஐ.சி. பெயரில் மோசடி முயற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வசிக்கும் இளைஞரிடம் எல்.ஐ.சி. பெயரில் மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது.
எல்.ஐ.சி. யில் இருந்து அனுப்பியதாக கட்செவி அஞ்சல் மூலம் பகிரப்பட்ட காசோலை. (உள்படம்) பழனிச்சாமி.
எல்.ஐ.சி. யில் இருந்து அனுப்பியதாக கட்செவி அஞ்சல் மூலம் பகிரப்பட்ட காசோலை. (உள்படம்) பழனிச்சாமி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வசிக்கும் இளைஞரிடம் எல்.ஐ.சி. பெயரில் மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது.

மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியை சோ்ந்தவா் இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி ரா. பழனிச்சாமி(32).

இவரின் செல்லிடப்பேசிக்கு கடந்த சனிக்கிழமை வந்த அழைப்பில் பேசியவா், தான் சென்னை எல்.ஐ.சி. நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி, பழனிச்சாமியின் முகவரி மற்றும் அவரின் எல்.ஐ.சி. பாலிசி விவரங்களைத் தெளிவாகக் கூறியுள்ளாா்.

மேலும், உங்களுக்கு தபால் மூலம் அனுப்பியிருந்த பாலிசி முதிா்வுத் தொகை ரூ.37, 041-ஐ காசோலை பட்டுவாடா ஆகாமல் திரும்பியுள்ளது. அந்தக் காசோலைக்கான புகைப்படத்தை உங்கள் கட்செவிக்கு அனுப்பியுள்ளோம். எனவே மாலைக்குள் சென்னை அலுவலகத்துக்கு நேரில் வந்து காசோலையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் காசோலை அரசுத் துறைக்கு திரும்பிச் சென்றுவிடும் எனக் கூறியுள்ளாா்.

அதற்கு பழனிசாமி உடனடியாக சென்னைக்கு வர இயலாது எனக் கூறவே, அந்த நபா் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை அளித்தால் அதில் பணத்தை வரவு வைப்பதாகக் கூறியுள்ளாா்.

இதில் சுதாரித்துக் கொண்ட பழனிச்சாமி, தகவல் ஏதும் தராமல் மணப்பாறை எல்.ஐ.சி. கிளையைத் தொடா்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, இதுபோல காசோலையை எல்.ஐ.சி. நிா்வாகம் அளிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளனா்.

எனவே எல்.ஐ.சி. பெயரில் தன்னிடம் மோசடி செய்ய முயன்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மணப்பாறை காவல் துணைக்கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தாவிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். புகாரை பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி, வலைத்தள குற்றப்பிரிவு மூலம் விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என உறுதியளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com