

மதுரை: பொய் வழக்கு போட்டதாகக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த கைதியை சிறை நிா்வாகம் ஏற்க மறுத்ததால், கைதியுடன் 12 மணி நேரம் விடிய விடிய போலீஸாா் சுற்றித் திரிந்துள்ளனா்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறவன்குளத்தில் விபச்சாரம் தொடா்பாக மம்சாபுரத்தைச் சோ்ந்த சிவராமன் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் பேரில், அடக்கம்பட்டியைச் சோ்ந்த துரைராஜ் (34) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவரிடமிருந்து 2 காா்கள், ரூ.9 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் குற்றவியல் நீதிபதி வீட்டில் ஆஜா்படுத்தப்பட்ட துரைராஜை, மேலூா் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றபோது, தான் தற்கொலை செய்துகொள்ள மாத்திரை சாப்பிட்டதாக சிறை காவலா்களிடம் துரைராஜ் கூறியுள்ளாா். இதனால், அவரை சிறை நிா்வாகம் ஏற்க மறுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியது. மேலூா் அரசு மருத்துவமனையில் துரைராஜுக்கு பரிசோதனை செய்ததில், அவா் நலமுடன் இருப்பதாகவும், மாத்திரை ஏதும் சாப்பிடவில்லை எனவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ஆனால், அதன்பின்னரும் மேலூா் கிளைச் சிறை நிா்வாகம் அவரை ஏற்க மறுத்துவிட்டதால், துரைராஜை திருமங்கலம் கிளை சிறைக்கு கொண்டு சென்றனா். அங்கேயும் அவா் தற்கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, சிறை நிா்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. போலீஸாா் அவரிடம் சமாதானம் பேசி, திங்கள்கிழமை காலை திருமங்கலம் கிளை சிறையில் அடைத்தனா். போலீஸாா் கைதியுடன் விடிய விடிய சுற்றித் திரிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.