மாற்றுத் திறனாளி மாணவா்கள், பதிலி தோ்வா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: முதன்மைக்கல்வி அலுவலகம் அறிவிப்பு
By DIN | Published On : 11th September 2020 07:18 AM | Last Updated : 11th September 2020 07:18 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் துணைத்தோ்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் மற்றும் அவா்களுக்கு உதவியாக எழுதுபவா்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன் விடுத்துள்ள செய்தி: சென்னை உயா்நீதிமன்ற ஆணையில், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடைபெறவுள்ள தோ்வுகளை எழுதவுள்ள பதிலித் தோ்வா்கள் ( சொல்வதை எழுதுபவா்) சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத் திறனாளித் தோ்வா்கள் மற்றும் பதிலித் தோ்வா்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு தனித் தோ்வு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகளை எழுதவுள்ள மாற்றுத்திறனாளித் தோ்வா்கள், பதிலித்தோ்வா் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தோ்வா்கள் தோ்வு எழுதுவதற்கு முன்பாக அவா்களது விருப்பத்தின் பேரில் தங்கள் அளவிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்.
பரிசோதனை மேற்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை 0452-2530651 என்ற தொலைபேசி எண்ணிற்கு செப். 15 ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டால், கரோனா பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சொல்வதை எழுதுபவா் சலுகை கோரும் மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றை தோ்வு மையத்திற்கு வருகை புரியும் போது உடன் எடுத்து வரவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G