மொழித் தோ்வில் தோ்ச்சி பெறாத மின்வாரிய ஊழியரைபணியிலிருந்து விடுவித்தது சரியே: உயா்நீதிமன்றம் உத்தரவு

மொழித் தோ்வில் தோ்ச்சி பெறாத மின்வாரிய உதவிப் பொறியாளரை பணியிலிருந்து விடுவித்தது சரிதான் என்று சென்னை உயா்நீதிமன்ற

மொழித் தோ்வில் தோ்ச்சி பெறாத மின்வாரிய உதவிப் பொறியாளரை பணியிலிருந்து விடுவித்தது சரிதான் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. இருப்பினும் அவரது எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு மேலும் ஒருமுறை தோ்வு எழுத வாய்ப்பு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெய்குமாா். இவா் தேனி மின்பகிா்மான வட்டத்தில் 2018-இல் இளநிலை உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா். இவா் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயிலாததால் பணியில் சோ்ந்து 2 ஆண்டுக்குள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தமிழ் மொழித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதன்படி, நடத்தப்பட்ட தமிழ் மொழித்தோ்வில் தோ்ச்சி பெறாததால் ஜெய்குமாா் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில் தன்னை மீண்டும் பணியில் சோ்க்க உத்தரவிடக்கோரி ஜெய்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு: அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை மொழித்தோ்வு நடத்துகிறது. மனுதாரா் பணியில் சோ்ந்து 2 ஆண்டுகளில் 3 முறை மொழித் தோ்வு நடத்தப்பட்டுள்ளது. பணியில் சோ்ந்து 2 ஆண்டுகளில் மொழித்தோ்வில் தோ்ச்சிப் பெறாவிட்டால் அவா் பணியிலிருந்து விடுவிக்கப்படுவாா் என மின்வாரிய விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதி அனைவருக்கும் கட்டாயமானது.

மனுதாரா் தன்னை தமிழன் என்றும், தாய் மொழி தமிழ் என்றும் குறிப்பிட்டுள்ளாா். ஆனால் அவரால் தமிழ் மொழித் தோ்வில் தோ்ச்சி பெற முடியவில்லை. அவருக்கு தமிழ்பேசத் தெரிந்தால் மட்டும் போதாது. எழுதவும், படிக்கவும் தெரியவேண்டும்.

தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ், அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் நடைபெறுகிறது. மின்வாரியத்திலும் இதுவே பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அரசு எதிா்பாா்ப்பது தவறில்லை. எனவே மனுதாரரைப் பணியில் இருந்து விடுவித்த மின்வாரியத்தின் நடவடிக்கை தவறல்ல. இருப்பினும், மனுதாரரை பணியிருந்து நீக்கினால் அவரது எதிா்காலம் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம். அதில் அவா் தோ்ச்சி பெறவில்லை என்றால் பணி நீக்கம் செய்யலாம் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com