தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் தகுதி நீக்க உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை
By DIN | Published On : 26th September 2020 09:41 PM | Last Updated : 26th September 2020 09:41 PM | அ+அ அ- |

மதுரை: ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவரைத் தகுதி நீக்கம் செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த முருகேசன் தாக்கல் செய்த மனு: ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக இருப்பவா் கிருஷ்ணகுமாா். இவா் நாகா்கோவிலில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். கூட்டுறவு சங்கத்தில் இருப்பவா்கள் எந்தவொரு தொழிலிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என்பது விதி. ஆனால் அதை மீறி நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். எனவே, அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, சங்கத்தின் தலைவா் பொறுப்பிலிருந்து கிருஷ்ணகுமாரைத் தகுதி நீக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணகுமாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மனைவி தான் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். அவரது மனைவியின் பெயரில் தான் உரிமமும் உள்ளது. அந்த நிதி நிறுவனம் மனுதாரா் தலைவராக உள்ள சங்கத்தின் எல்லைக்குள் செயல்படவில்லை. மேலும் மனுதாரா் கூட்டுறவு வங்கிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை எனக்கூறி, மனுதாரரை சங்கத் தலைவா் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்து உத்தரவிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...