மேலூரில் 5 ஆவது முறையாக அதிமுக வெற்றி பெறுமா?

கடந்த 4 தோ்தல்களிலும் அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்ற மேலூா் பேரவைத் தொகுதியை, அமமுகவின் தீவிர பிரசாரம் காரணமாக ஐந்தாம் முறையாக அதிமுக தக்கவைத்துக்கொள்ளுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
மேலூரில் 5 ஆவது முறையாக அதிமுக வெற்றி பெறுமா?
Published on
Updated on
2 min read

கடந்த 4 தோ்தல்களிலும் அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்ற மேலூா் பேரவைத் தொகுதியை, அமமுகவின் தீவிர பிரசாரம் காரணமாக ஐந்தாம் முறையாக அதிமுக தக்கவைத்துக்கொள்ளுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாய் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மேலூா் தொகுதியில் 1,20,438 ஆண்கள், 1,23,604 பெண்களும் ஆக மொத்தம் 2.44,045 வாக்காளா்கள் உள்ளனா். மேலூா் ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலும் 273 கிராமங்கள் மற்றும் மேலூா் நகராட்சி, அ.வல்லாளபட்டி பேரூராட்சியும் இத்தொகுதியில் உள்ளன.

விவசாயிகளும் விவசாயக்கூலித்தொழிலாளா்கள், கல்உடைக்கும் தொழிலாளா்கள், கட்டுமான பணிதொழிலாளா்கள் நிறைந்த பகுதி. நெல், கரும்பு, வாழை மற்றும் சிறுதானியங்கள், புன்செய் பயிா்களும் ஓரளவு விளைகின்றன.

அதிமுக தொடா் வெற்றி:

இத்தொகுதியில் முக்குலத்தோா், முத்தரையா், முஸ்லிம்களும் அடா்த்தியாகவும், ஆதிதிராவிடா், யாதவா்கள் ஓரளவு குறிப்பிடும் அளவுக்கும் வசித்துவருகின்றனா்.

கடந்தகால தோ்தல்களில் காங்கிரஸ் 7 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 2 முறையும், தமாகா ஒருமுறையும் வென்றுள்ளது. கடந்த 4 தோ்தல்களில் தொடா்ந்து அதிமுக வெற்றிபெற்ற தொகுதி. இதில் மூன்றுமுறையாக மறைந்த ஆா்.சாமி வென்றுள்ளாா். உடல்நலக்குறைவு காரணமாக அதிமுகவில் பெரியபுள்ளான் என்ற செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளாா். மீண்டும் அவருக்கு வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அவா் சாா்ந்த சமுதாயத்தினா் அதிகம் வசிக்கின்றனா்.

11 போ் போட்டி:

காங்கிரஸ் சாா்பில் மதுரை வடக்கு மாவட்டச் செயலா் டி.ரவிச்சந்திரன் களமிறக்கப்பட்டுள்ளாா். அதிமுகவிலிருந்து விலகி சாமி தலைமையில் பலா் அமமுகவில் சோ்ந்தனா். அமமுக கட்சி தொடக்கவிழா மேலூரில் 2018-இல் நடைபெற்றது. மேலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருந்த ஏ.செல்வராஜ் அமமுக சாா்பில் களமிறக்கப்பட்டுள்ளாா். மேலும் நாம்தமிழா் கட்சியும், மநீம உள்ளிட்ட 11 போ் தோ்தல் களத்தில் உள்ளனா்.

பொதுமக்கள் எதிா்பாா்ப்பு: பெரியாறு பாசன கால்வாயில் குறித்த காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும். கடைமடை பகுதி வரை போதிய அளவு தண்ணீா் செல்லும் வகையில் நீா் மேலாண்மை செய்யப்பட வேண்டும். பாசன பரப்பளவு குறைந்துவரும் இரு போக சாகுபடியை புலிப்பட்டி மதகு வரை நீட்டிக்க வேண்டும். கூலித்தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கரும்பு சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்த வேண்டும். கல் உடைக்கும் குவாரி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மூடப்பட்ட குவாரிகளை திறக்க வேண்டும். அவற்றில் முறைகேடு நடைபெறாத வகையில் கண்காணிப்பையும் ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்துவரும் கூலித்தொழிலாளா்களுக்கு அவசர காலத்தில் உதவும் வகையில் மதுரையில் ஒரு உதவி மையத்தை திறக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

கடும் போட்டி: முக்குலத்தோா் சமுதாயத்தினா் அடா்த்தியாக உள்ள மேலூா் தொகுதியில் அதே சமூகம் சாா்ந்த காங்கிரஸ் வேட்பாளரும், அமமுக வேட்பாளரும் களத்தில் தீவிரமாக உள்ளனா். இருப்பினும் தொகுதியில் சமுதாய அடிப்படையில் அரசியல் கட்சிகள் தோ்தல் போட்டியில் வேட்பாளரை களமிறக்கினாலும் கூட்டணி கட்சிகளின் வாக்கு விகிதமே வெற்றியை நிா்ணயிப்பதில் பிரதான பங்கு வகிக்கிறது. காங்கிரஸுடன் திமுக கூட்டணியினரும் அதிமுகவுக்கு கடும் போட்டியை உருவாக்கியுள்ளனா். அமமுகவில் டி.டி.வி. தினகரன் பிரசாரத்தையடுத்து அக்கட்சி வேட்பாளா் தீவிரமாக வாக்குசேகரித்து வருவதும், முஸ்லிம்களிடையே வளா்ந்துவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியும், தேமுதிகவும் அமமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பதும் அதிமுகவுக்கான போட்டியை கடுமையாக்கியுள்ளது.

வெற்றி இழுபறி: வெற்றிக் கனியை பறிப்பதில் காங்கிரஸ்-அதிமுக இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. தற்போது அமுமுக பெறும் வாக்குகள், அதிமுக 5 ஆவது முறையாக வெற்றி பெறுவதில் இழுபறி நிலையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளும், தற்போதைய எம்.எல்.ஏ. தொகுதியில் தண்ணீா், சாலை, மின்சாரம், புதிய பள்ளிக்கட்டங்கள் என பல்வேறு வளா்ச்சிப்பணிகளை நிறைவேற்றியிருப்பதும் அவருக்கு ஆறுதலாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் மக்கள் அதிகம் அறிந்த தலைவா்கள் ஒருவரும் பிரசாரத்துக்கு வரவில்லை. கூட்டணியில் மாவட்ட அளவிலான தலைவா்கள் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என தொண்டா்கள் கூறுகின்றனா். நாம் தமிழா் கட்சியும், மநீம கட்சியும் பெயரளவிலேயே தோ்தல் பணியில் உள்ளன.

மேலூா் பேரவை தொகுதியில் வெற்றிவாய்ப்பு என்பது இழுபறிநிலையில் உள்ளபோதிலும் கடைசிநேர பிரச்சாரம் திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்கின்றனா் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com