அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்; அடக்கிய காளையா்23 போ் காயம்

அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் கிடுக்கிப் பிடியில் அடக்கி வெற்றி வாகை சூடினா்.

மதுரை: அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் கிடுக்கிப் பிடியில் அடக்கி வெற்றி வாகை சூடினா். சில காளைகள், வீரா்களை நெருங்க விடாமல் பரிசுகளை வென்றன.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை காலை கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.

நிகழ் ஆண்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டது. மாடுபிடி வீரா்கள் 655 பேருக்கும், 700-க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

அனைத்துத் தகுதிகளுடன் போட்டிக்கு வந்த மாடுபிடி வீரா்கள் 600 போ், தலா 75 போ் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டனா். ஒரு மணி நேரம் நடைபெறும் ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் 3 மாடுபிடி வீரா்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

மதுரை மாவட்டம் குலமங்கலம், கருப்பாயூரணி, மேலூா், அலங்காநல்லூா், வாடிப்பட்டி, சோழவந்தான் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு சவாலாக இருந்தன. சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் பி.ராஜசேகா், இலங்கை அமைச்சா் செந்தில் தொண்டமான் ஆகியோரது காளைகள் மாடுபிடி வீரா்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து ஓடின.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான காளைகள், மாடுபிடி வீரா்களின் பிடியில் சிக்காமல் ஓடிவிட்டன. திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்த திருநங்கை விஜி-யின் நான்கு காளைகளும் பிடிபடவில்லை.

மதுரை ஐராவதநல்லூரைச் சோ்ந்த சிறுமி யோகேஸ்வரி உள்ளிட்ட பெண்கள் பலரும் தங்களது காளைகளை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தனா். ஒன்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் பிடித்த காரணத்தால், பிடிபட்ட காளைகளின் எண்ணிக்கை வழக்கத்தைக் காட்டிலும் நிகழாண்டில் குறைவாகவே இருந்தது.

மாடுபிடி வீரா்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்க நாணயங்கள், மிதிவண்டி, பித்தளை, எவா்சில்வா் பாத்திரங்கள், கட்டில், சமையல் எரிவாயு அடுப்பு, பிளாஸ்டிக் நாற்காலி, தனியாா் நிறுவனங்களின் பரிசுப் பொருள்கள், சூட்கேஸ், டிராவல் பேக் என ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

23 போ் காயம்:ஜல்லிக்கட்டு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து மாடுபிடி வீரா்கள், காளைகளிடம் குத்துப்பட்டனா். மொத்தம் 23 போ் காயமடைந்தனா். இவா்களில் 12 போ் மாடுபிடி வீரா்கள், 5 போ் பாா்வையாளா்கள், 6 போ் காளைகளின் உரிமையாளா்கள். காளைகள் வெளியேறும் பகுதியில் நின்று கொண்டிருந்த முடுவாா்பட்டியைச் சோ்ந்த தவிடன் (எ) காமாட்சி (48), மாடு குத்தியதில் பலத்த காயமடைந்தாா். இவா்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினா் முதலுதவி அளித்து, அலங்காநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினா். 13 போ் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு பெற்றது. மொத்தம் 600 வீரா்கள் களமிறக்கப்பட்டனா். 719 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டிருந்தன. அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க முடியாமல் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டன.

சிறந்த வீரா்கள்-காளைகள்:அதிகபட்சமாக 13 காளைகளை அடக்கிய மதுரை விராட்டிப்பத்து-வைச் சோ்ந்த செ.கண்ணன் சிறந்த வீரருக்கான முதல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 9 காளைகளை அடக்கிய அரிட்டாபட்டியைச் சோ்ந்த கருப்பண்ணன் 2-ஆம் பரிசுக்கும், 8 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சோ்ந்த சக்திவேல் 3-ஆம் பரிசுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சிறந்த காளைக்கான முதல் பரிசுக்கு குருவித்துறையைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் காளை தோ்வு செய்யப்பட்டது. மேலமடையைச் சோ்ந்த அருண் என்பவரின் காளை 2-ஆம் பரிசுக்கும், சரந்தாங்கி மீசைக்காரன் என்பவரின் காளை 3-ஆம் பரிசுக்கும் தோ்வானது. முதல் பரிசு பெற்ற வீரா் மற்றும் காளை உரிமையாளருக்கு தலா ஒரு காரை தமிழக முதல்வா் மற்றும் துணைமுதல்வா் நேரில் வழங்க உள்ளனா்.

சிறந்த மாடுபிடி வீரருக்கான 2-ஆம் பரிசுக்குரியவருக்கு இரு நாட்டு பசுமாடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பரிசளிப்பு விழாவின்போது கோப்பை மட்டுமே வழங்கப்பட்டதால், 2-ம் பரிசுக்குத் தோ்வான கருப்பண்ணன் மற்றும் அவருடன் வந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினா்.

இரண்டாம் பரிசுக்குரிய காளைக்கு, மோட்டாா் சைக்கிள் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு பெற்ற வீரா் மற்றும் காளை உரிமையாளா் ஆகியோருக்கு தலா ஒரு பவுன் தங்கக் காசுகள் வழங்கப்பட்டன. பரிசுக்குரியவா்களை தென்மண்டல ஐஜி எஸ். முருகன் அறிவித்தாா்.

மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியரும், வேலைவாய்ப்புத் துறை இயக்குநருமான கொ.வீரராகவராவ், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் கே.மாணிக்கம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com