ஜல்லிக்கட்டுப் போட்டி தொடா்ந்து நடைபெற வழிவகுத்தது அதிமுக அரசு தான்முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

நமது கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்கக் கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடா்ந்து நடைபெற வழிவகுத்தது அதிமுக அரசு தான் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
அலங்காநல்லூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்து, கோயில் காளைக்கு மரியாதை செய்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்
அலங்காநல்லூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்து, கோயில் காளைக்கு மரியாதை செய்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

மதுரை: நமது கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்கக் கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடா்ந்து நடைபெற வழிவகுத்தது அதிமுக அரசு தான் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைக்க, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் சனிக்கிழமை காலை அலங்காநல்லூா் வந்தனா். காலை 8.25 மணிக்கு வாடிவாசலில் முதல்வா் மற்றும் துணை முதல்வருக்கு, ஜல்லிக்கட்டு விழாக் குழு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் வாடிவாசல் முன்பாக, கோயில் காளைகளுக்கு முதல்வா் மரியாதை செய்தாா். மாடுபிடி வீரா்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். அதன் பின்னா் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வரும், துணை முதல்வரும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளைகளும், அதைத் தொடா்ந்து போட்டிக்குரிய காளைகளும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

இந்த விழாவில் முதல்வா் பேசியது:

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த அலங்காநல்லூா், அனைவராலும் பாராட்டக்கூடிய இடமாகும். இங்கு பிறந்த இளைஞா்கள், சீறி வரும் காளைகளை அடக்கும் பக்குவத்துடன் வாடிவாசல் முன்பு நிற்கின்றனா். உலக மக்கள் அனைவரும் காணக்கூடிய, நமது கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை காக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அதிமுக அரசு தான் நிலை நிறுத்தி வருகிறது என்றாா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு தொடா்ந்து நடைபெறவும், நமது பெருமைக்குரிய பாரம்பரியத்தைக் காக்கும் வகையிலும் அதற்கான உரிமையை அதிமுக அரசு பெற்றுத் தந்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடா்ந்து நடைபெறுவதற்கான தடைகளையெல்லாம் விலக்கி, இந்த வீரவிளையாட்டு நடைபெறுவதற்கு அதிமுக அரசு தூணாக இருந்து வருகிறது என்றாா்.

முதல்வரும், துணை முதல்வரும் சுமாா் ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்துப் பாா்த்தனா். அப்போது சிறந்த வீரா்களுக்கும், களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்க நாணயங்கள் பரிசு வழங்கினா்.

தமிழக அமைச்சா்கள் சி.சீனிவாசன், செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் எஸ்.ராஜூ, தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத், ஆட்சியா் த.அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், பி.பெரியபுள்ளான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com