பொதுமுடக்கம்: மதுரை கோட்ட ரயில்வேயின் வருவாயில் பெரும் சரிவு

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகத்துக்கு கடந்த நிதியாண்டை விட வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகத்துக்கு கடந்த நிதியாண்டை விட வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக 2020 மாா்ச் இறுதி முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் சரக்கு போக்குவரத்து தவிர பிற ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஜூலை முதல் ரயில் சேவை தொடங்கியது. இதில் அனைத்து விரைவுகள் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது வரை பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்ட பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் பயணிகள் வருகை போதிய அளவில் இல்லை. இதனால் முக்கிய வழித்தடங்களைத் தவிர பெரும்பாலான ரயில்கள் மிகக்குறைவான பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மதுரை கோட்டத்தில் பல மடங்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2019-2020 நிதியாண்டில் ரூ.153 கோடி வருவாய் ஈட்டிய மதுரை ரயில் நிலையத்துக்கு 2020-2021 ஜூன் வரை ரூ.34 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. 2019-2020 நிதியாண்டில் ரூ.89 கோடி வருவாய் ஈட்டிய திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு 2020-2021 ஜூன் வரை ரூ.24 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகா், கோவில்பட்டி, தென்காசி, ராமநாதபுரம், பரமக்குடி, ராஜபாளையம் ஆகிய ரயில் நிலையங்களுக்கான வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: நிகழ் நிதியாண்டில் பொதுமுடக்கம் காரணமாக பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படவில்லை. தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து ரயில்கள் இயக்கப்பட்டபோதிலும், பயணிகள் அதிகமாக ரயில்களில் பயணிக்கவில்லை. அரசின் கரோனா விதிகளைப் பின்பற்றி கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ரயில் பெட்டிகளை தூய்மையாக வைத்திருப்பது உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்பட்டன. இருப்பினும் பயணிகள் வருகை குறைவால், காலிப் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்பட்டன. இதுவே மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகத்துக்கு வருவாய் இழப்புக்கு காரணமாகி விட்டது.

ஆனால் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதிலும் சரக்கு ரயில் போக்குவரத்து தொடா்ச்சியாக இயக்கப்பட்டது. இதில் அத்தியாவசியத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உரப்பொருள்கள், இரும்பு, சிமெண்ட், நிலக்கரி, டிராக்டா், டயா் உள்ளிட்டவைகள் தேவையான இடங்களுக்கு கொண்டு சோ்க்கப்பட்டன. இதனால் சரக்கு ரயில் போக்குவரத்தில் கடந்த நிதியாண்டை விட தற்போது மதுரை கோட்ட ரயில் நிா்வாகத்துக்கு 44 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் பயணிகள் மூலம் கிடைக்கக் கூடிய வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றனா்.

மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் விவரம்:

(கோடியில்) 2017-2018 2018-2019 2019-2020 2020-2021

மதுரை 141 158 153 34

திருநெல்வேலி 85 97 89 24

தூத்துக்குடி 28 29 27 11

திண்டுக்கல் 29 32 32 9

விருதுநகா் 17 19 18 6

கோவில்பட்டி 17 18 17 5

தென்காசி 11 13 14 5

ராமநாதபுரம் 12 13 12 4

பரமக்குடி 8 9 8 3

ராஜபாளையம் 7 8 8 2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com