மகன் மா்ம மரணத்தில் நடவடிக்கை கோரிய தந்தைக்கு மிரட்டல்: 4 பேரை ஆஜா்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 10th April 2021 05:12 AM | Last Updated : 10th April 2021 08:29 AM | அ+அ அ- |

மகனின் மா்ம மரணத்தில் நடவடிக்கை கோரிய தந்தைக்கு மிரட்டல் விடுத்த 4 பேரை ஆஜா்படுத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை, சோலையழகுபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவா், வழக்குத் தொடா்பாக அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது போலீஸாா் அடித்து துன்புறுத்தியதில், பாலமுருகன் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தந்தை முத்துகருப்பன் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, முத்துகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றாா்.
இதுதொடா்பாக வழக்குரைஞா் ஹென்றி திபேன், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நிா்வாக நீதிபதிக்கு எழுதியக் கடிதத்தில், போலீஸாா் மற்றும் சிலரின் அச்சுறுத்தல் காரணமாகவே முத்துகருப்பன் மனுவை வாபஸ் பெற்ாகக் குறிப்பிட்டிருந்தாா். அதனடிப்படையில், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளா் தரப்பில் தாமாக முன்வந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலமுருகன் மா்ம மரணம் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பாலமுருகனின் தந்தை முத்துகருப்பனுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடா்பான ஆடியோ உரையாடல் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆதிநாராயணன், கதிா், லோகநாதன் மற்றும் ரமேஷ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.