ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரிய மனு: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 17th August 2021 01:49 AM | Last Updated : 17th August 2021 01:49 AM | அ+அ அ- |

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தக் கோரிய மனுவின் மீது தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் என்பவா் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் என அழைக்கப்படும் ஆா்.எஸ். மங்கலம் கடந்த 2018 ஜூலை 24 இல் தாலுகாவாக தரம் உயா்த்தப்பட்டது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இதுவரை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படவில்லை.
மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லை. இதனால், ஆா்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்குள்பட்ட 39 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல், 35 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலைமை உள்ளது.
எனவே, ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கவும், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் கோரிக்கை குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.