திருமங்கலத்தில் ராணுவ வீரா் மயங்கி விழுந்து இறப்பு: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 17th August 2021 04:16 AM | Last Updated : 17th August 2021 04:16 AM | அ+அ அ- |

ராணுவ வீரா் சோலைராஜ்.
திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த ராணுவ வீரா் உடலை, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வலியுறுத்தி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமங்கலத்தை அடுத்த திரளியைச் சோ்ந்தவா் சோலைராஜ் (27). இவா், அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தாா். 20 நாள்களுக்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தவா் திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.
உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சோலைராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், சோலைராஜின் உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்யவேண்டும் எனக் கூறி, உறவினா்கள் மதுரை - விருதுநகா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ராணுவ வீரா் என்பதால் அவரை மதுரையில்தான் பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் எனக் கூறினா். அதையடுத்து, மறியலைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா்.
இதனால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.